கர்த்தர் பெரியவர்

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!

Friday, June 27, 2008

பிலேயாமை போல பிழை செய்யாதீர்கள்!

அன்பு சகோதரர்களே கர்த்தரின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்!

இஸ்ரவேல் கோத்திரத்தார் அல்லாதவரும், வேத புத்தகத்தில் ஏறக்குறைய 60 முறை பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவருமான, பிலேயாமை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இவர் ஒரு புரஜாதியை சேர்ந்தவராக இருந்த போதிலும் இவரை பற்றி தியானிக்கும் போது, இவரின் பல அனுபவங்கள் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்ததோடு, தேவன் எல்லோரையும் சமமாகவே பார்க்கிறார் என்பதையும் அவரிடம் பட்சபாதம் இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது.

வேத புத்தகத்தில் நான் படித்த புற ஜாதி மனிதர்களில் மிகவும் மேன்மையானவன் என்று நான் எண்ணும் இந்த " பேயோரின் குமாரனாகிய பிலேயாமிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அநேகம் இருத்தாலும், முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

பிலேயாமின் மேன்மை - 1

நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன்; (எண்:22:6)

இந்த வார்த்தைகள் பிலேயாமை பார்த்து பாலக் ராஜா சொன்னது.

"உன்னை ஆசீர்வதிப்பவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னை சபிப்பவர்களை சபிப்பேன்" என்று கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் கொடுத்தது அனைவரும் அறிந்ததே! ஆனால் இங்கு பிலேயாமுடைய அபிஷேகமோ வேறுவிதம். அவர் யாரை ஆசீர்வதித்தலும் அல்லது சபித்தாலும் அது அப்படியே நடக்குமாம். கிட்டதட்ட ஒரு தேவ வாக்கை போல இருக்குமாம். இது எவ்வளவு மேன்மை பாருங்கள். அவன் இஸ்ரவேலை ஆசீர்வதித்தான் அது அப்படியே நடந்தது அல்லவா?

தேவ ஆவியானவர் ஒருவர் மீது வரும் பொது மட்டும்தான் இதுபோல் நடக்கும் என்று நான் நினைக்கிறேன். எனவே இது மிகவும் மேன்மையானதே!


பிலேயாமின் மேன்மை - 2

தேவ ஆவி அவன்மேல் வந்தது. (எண்:24:2)

அன்பானவர்களே!

"தேவ ஆவியை பெற்ற இவனைபோல மனிதன் யார்" என்று பார்வோனால் புகழப்பட்ட யோசேப்பை தவிர தேவ ஆவியானவர் புறாவைபோல நமதாண்டவராகிய இயேசு கிறிஸ்த்துமேல் தான் இறங்கினார்.

அப்படி இருக்க,

தேவ ஆவி அவன் மேல் வந்தது என்று வேத புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு புறஜாதி மனிதன் பிலேயாமே!

தேவ ஆவியானவரின் அபிஷேகத்தை அனுபவித்து பார்த்தவர் மட்டும்தான் அதன் மேன்மையை அறிய முடியும்.

அந்த மேன்மையான அப்சிஷேகத்தை பெற்றவன் பிலேயாம்.

பிலேயாமின் மேன்மை - 3

கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது, (எண்:24:3,15)

எசாயா தீர்க்கன் சொல்லும் வார்த்தையாகிய "இந்த ஜனங்கள் கண்ணிருந்தும் காணாமல் ..........மூடிப்போடு" என்ற வசனப்படி மூடப்பட்ட கண்கள் திறக்கப்பட்ட அனுபவம் உடையவர்கள் எத்தனைபேர் உள்ளனர் என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் அந்த அனுபவத்துக்குள் கடந்து சென்றிருக்கிறேன்.

நமது மாமிச கண்களுக்கு மேலான ஒரு கண், அதாவது மாமிச கண்களால் காண முடியாததை பார்க்கும் தேவனின் கண்கள் அது என்று கூட கூறலாம்.
"கர்த்தர் ஆகாரின் கண்களை திறந்தார்" அப்பொழுது அவள் சாதரண கண்ணால் பார்க்க முடியாத தண்ணீரை அவளால் பார்க்க முடிந்தது. பிலேயாம் கண்ணை திறந்தபோது "கர்த்தரின் தூதனை" பார்க்க முடிந்தது. எலிசாவின் வேலைக்காரன் கண்களை திறந்த பொது "கர்த்தரின் சேனையை" பார்க்க முடிந்தது. இது போல் பல சம்பவங்களை கூற முடியும்.

ஆனால் இங்கு பிலேயாமின் திறக்கப்பட்ட கண்களுக்கு தெரிவது என்ன? தீர்க்கமான எதிர்காலம்! அதை அபடியே பார்த்து அவன் தரிசனம் சொல்வதை பின்வரும் வசனங்கள் சொல்கின்றன அவ்வளவு மேன்மை மிக்கவன்.

பிலேயாமின் மேன்மை - 4

தேவன் பிலேயாமிடத்தில் வந்து: உன்னிடத்திலிருக்கிற இந்த மனிதர் யார் என்றார்(எண்:8:9)

"அப்படியானால் எனக்கு எப்படியோ" என்று கர்த்தரிடம் விசாரிக்க போன ரேபாக்காளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், அது போல் "யுத்தத்துக்கு போகலாமா" என்று கர்த்தரிடத்தில் விசாரித்த ராஜாக்களை பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம்

ஆனால் "உன்னிடத்தில் வந்திருப்பவர்கள் யார்" என்று தேவன் வந்து விசாரிக்கும் அளவுக்கு ஒருவர் இருந்தார் என்றால் அவர் பிலேயாம் தான். ஆ எவ்வளவு மென்மையான ஓன்று!

இவ்வளவு மேன்மை உள்ள "பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள். (எண்:31:8)


ஒரு அற்ப மனிதனை போல் மடிய அவன் செய்த பிழை தான் என்ன?

பிழை - 1 தீமையான ஆலோசனை வழங்குதல்

வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தை (வெளி:2-14)

பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; (எண்:31:16)

அன்பானவர்களே ஒருவருக்கு தீய ஆலோசனை வழங்குவது எவ்வளவு தவறானது என்பதை அறிய வேண்டும் என்றால் அதற்க்கு பிலேயாம் ஒருவரே மிகப்பெரிய எடுத்துக்காட்டு என்று கூறலாம்.

"கர்த்தருடைய ஜனங்களை அழிக்க அவர்களை பாவத்தில் விழவைக்க வேண்டும்" என்ற ஒரு தீய ஆலோசனையை போற போக்கில் சாதாரணமாக சொல்லிவிட்டு போனது அவன் செய்த மிக பெரிய பிழை.

இன்றும் உலகில் இதுபோல் ஆலோசனை சொல்லும் அநேகரை பார்க்கலாம்.

  • வக்கீல்கள் கேசை ஜெயிப்பதற்கும்
  • ஆடிட்டர்கள் வரியை ஏய்ப்பதற்கும்
  • அரசாங்க அதிகாரிகள் பணம் சம்பாதிப்பதற்கும்
  • அரசியல் வாதிகள் மென்மையாய் வாழ்வதற்கும்

இன்னும் என்னென்னவோ காரணங்களுக்காக தவறான ஆலோசனைகள் உலகில் மிக சுலபமாக வழங்கப்படுகின்றன.

தேவன் இவைகளை கடுமையாக வெறுக்கிறார், எனவே தேவ பிள்ளைகளாகிய நாம் யாருக்கும் இப்படி தவறான ஆலோசனை சொல்வதில் இருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது.

பிழை - 2 - வெளிவேஷம் போடுதல்

பிலேயாம் பாலாகின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தரமாக: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரியகாரியமானாலும் செய்யும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக் கூடாது. (எண்:22:18)

அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்கு தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக் கூடாது; (எண்:24:12)


என்று எதோ பெரிய பரிசுத்தவான் போல வெளி வேஷம் போடுகிறான். ஆனால் பாலாக் அநீதத்தின் கூலியை விரும்பினான் என்று கீழ்க்கண்ட வசனங்கள் தெளிவாக சொல்கிறது

பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி,செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியைவிரும்பி, தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டான்;2பேது 2:15

இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி,(யூதா 1:5)


இவ்வளவு மேன்மையான மனிதர் இப்படி வெளி வேஷம் போட்டது இரண்டாவது பிழை.

உங்கள் மனதில் என்ன உண்டு என்பதை திறந்து வெளிப்படையாக சொல்லுங்கள தண்டனை இல்லை. மேலும் தவறு இருக்குமாயின் திருத்துக்கொள்ளவும் வாய்ப்புண்டு.

ஆனால் உள்ளொன்றும் புறமொன்றும் வைத்து பேசும் ஒருவர் ஒருநாளும் திருந்தவே முடியாது எனவே ஆண்டவர் இதை வெறுக்கிறார். உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள் என்பது ஆண்டவரின் கட்டளை.

ஆனால் இன்றும் உலகத்தில் இதைபோல், மனமெல்லாம் பொருளாசையால் நிறைந்து வெளியில் பரிசுத்தமாக பேசும் அநேகரை பார்க்க முடியும். ஏன் உழியகாரார்களை கூட பார்க்க முடியும். ஆண்டவர் இதை கடுமையாக வெறுக்கிறார் என்பதற்கு பிலேயாமின் முடிவு நல்ல படம்.


பிழை - 3 தேவன் வேண்டாம் என்று சொன்ன காரியத்தம் மீண்டும் மீண்டும் விசாரிப்பது

கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படிக்கு நீங்களும் இந்த இராத்திரி இங்கே தங்கியிருங்கள் என்றான்.
(எண்:22:19)
அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். (எண்:22:22)


அன்பானவர்களே!

இங்கு ஒரு முக்கியமான பாடம் உள்ளது. அதாவது தேவன் ஒரு முறை வேண்டாம் என்று சொன்ன காரியத்தை நாம் மீண்டும் மீண்டும் அவரிடத்தில் விசாரிப்பது சரியானது அல்ல. இன்று நம்மில் அநேகர் இந்த தவறை செய்கிறோம்.

"என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை (ஆதி 6:3) என்ற கர்த்தர் மனிதன் விரும்பி கேட்கும் ஒற்றை போராடி தடுப்பவர் அல்ல. அவன் போக்கிலே விட்டு அதனால் வரும் தீமை என்னவென்பதை அவனையே உணர வைப்பவர்.

எனவே எந்த ஒரு உலக பொருளுக்கும் சுகத்துக்கும் விடாப்பிடியான ஜெபம் நல்லதல்ல என்பது எனது கருத்து. பவுல் அவர்கள் கூட தன் உடம்பில் உள்ள முள் குறித்து ஜெபித்து பார்த்துவிட்டு பிறகு விட்டுவிட்டார் என்று பார்க்கிறோம்.

எனவே தேவன் ஒரு முறை வேண்டாம் என்று சொன்ன காரியத்தை பிலேயாம் மீண்டும் விசாரித்தான். எப்படியாவது போக வேண்டும் என்ற அவனின் மனதில் இருந்த வேகத்தை பார்த்த தேவனும் அவனுக்கு போகும் படி உத்தரவு கொடுத்தார் ஆனால் அது அவருக்கு பிரியமல்ல என்பதையும் வழியில் தந்து தூதனை அனுப்பி தெரிவித்தார்.

எனவே அன்பானவர்களே தேவனின் சித்தம் என்ன என்பதை சரியாக அறிந்து அதன்படி செயல்படுவது மட்டுமே நல்லது.

பிலேயாமின் மேன்மையை பார்க்கும் பொது அவன் செய்த பிழைகள் மிகவும் சாதரணமானவைகளே. ஆனால் பிழை என்ன என்பதை விட யார் செய்கிறார்கள் என்பதுதான் ஆண்டவரின் தண்டனையை தீர்மானிக்கும். மோசே செய்த தவறு பெரியதல்ல ஆனால் தேவனை முக முகமாக அறிந்த மோசே செய்தது தான் தவறு.

"எவனுக்கு அதிகம் கொடுக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் கேட்கப்படும்" இதுபோல் எவருக்கு அதிக தரிசனமும் தேவனின் நெருங்கிய உறவும் இருக்கிறதோ அவர் செய்யும் ஒரு சரிய தவறு கூட கடுமையான தண்டனையை தரும என்பது வாழ்வில் நான் அறிந்த பாடம் "எஜமானின் சித்தம் அறிந்தும் அதபடி செய்யாதவன் அதிக அடிகளுக்கு பாத்திரவான்" என்ற ஆண்டவரின் வார்த்தையை நினைவு கொள்ளுங்கள்.

கர்த்தரின் சித்தம் அறிந்து அதன்படி வாழ நம்மை ஒப்புகொடுப்போம்

நன்றி!

1 Comments:

Anonymous Anonymous said...

Thanks brother..

February 22, 2014 at 6:57 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home